திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.49 திருவெண்காடு - திருக்குறுந்தொகை
பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறைச் சென்னிவைத் தான்றிரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே.
1
கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
2
ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் குந்தன் னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.
3
பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடந்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.
4
பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
5
கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேஅடை நெஞ்சமே.
6
தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.
7
பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
சிட்ட னாதியென் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே.
8
ஏன வேடத்தி னானும் பிரமனுந்
தான வேடமுன் றாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற் கருள்செய்யுங்
கான வேடன்றன் வெண்கா டடைநெஞ்சே.
9
பாலை யாடுவர் பன்மறை யோதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவர் அங்கமே.
10
இராவ ணஞ்செய மாமதி பற்றவை
இராவ ணம்முடை யான்றனை யுள்குமின்
இராவ ணன்றனை யூன்றி அருள்செய்த
இராவ ணன்றிரு வெண்கா டடைமினே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com